தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026–28ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவராக பி. யுவராஜ், செயலாளராக என். விஜய முரளி, பொருளாளராக வீ.கே. சுந்தர், துணைத் தலைவர்களாக எஸ். புவனேந்திரன் மற்றும் எஸ். சதீஷ்குமார், இணை செயலாளர்களாக பாலன் என்கிற ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர். உதயகுமார் ஆகியோர் பதவியேற்றனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சொந்தமாக அலுவலகம் அமைக்க தமிழக அரசு இடம் வழங்க வேண்டும் என்றும், சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான நிலுவை மானியங்களை விரைவில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திரைப்படத் துறைக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் பத்திரிகை தொடர்பாளர்களின் பணி முக்கியமானது என பாராட்டினார். மேலும், தமிழக முதல்வரின் அனுமதியை பெற்று வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், திரைப்படத் துறையினரின் கோரிக்கைகள் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வதாக அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.


