ஆண்டுதோறும் சிங்காரவேலர் விருது வழங்கப்படும் -முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கையை வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பாக கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அ. மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களின் உயரிய பண்பாட்டுப் பாரம்பரியத்தினைப் பறைசாற்றும் வகையில், தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய அருங்காட்சியகம் 50 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென இந்த ஆண்டு முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

ஆ. சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் (18.2.1860 – 11.2.1946) ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தம் வழக்கறிஞர் தொழிலையே துறந்த பெருந்தகை, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தவர், அவர்கள் நலனுக்காகப் பல போராட்டங்களில் பங்கேற்றவர், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் தந்தை, இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி, அறிவியல் தமிழறிஞர், பொதுச் சொத்துகள் மக்கள் நலனுக்காகப் பயன்பட வேண்டும் என்கிற பொதுவுடைமைக் கருத்தை வலியுறுத்தியவர், “பொதுவுடைமை இயக்கத்தின் விதிகள் மனித நேயத்துக்கு இசைவானது” என்று வலியுறுத்தியவர்.

அவர்தம் வழியில் தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ‘சிங்காரவேலர் விருது’ ஆண்டுதோறும் சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளோடு வழங்கப்படும். விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கிப் பொன்னாடை அணிவித்து விருதாளர் சிறப்பிக்கப்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.