பத்திரிக்கையாளர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உயர்வு

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கையை வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள், தாங்கள் ஒய்வு பெற்ற பின், மன நிறைவோடும், மன அமைதியோடும் வாழ்ந்திட வேண்டும் என்பதில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்கள். அதனால் தான் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011இல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது 5,000/- ரூபாயாக வழங்கப்பட்டு வந்த பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 8,000/- ரூபாயாகவும், அதே போல் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப ஓய்வூதியத்தை 2,500/- ரூபாயிலிருந்து 4,750/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கினார்கள்.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8,000/- ரூபாயிலிருந்து 10,000/- ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 4,750/- ரூபாயிலிருந்து 5,000/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.