விஜய் ஹசாரே டிராபியை தமிழக அணி ஐந்தாவது முறையாக வென்று சாம்பியன் பட்டம் பெற்றது

டெல்லியில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் பெங்கால் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. அபாரமாக ஆடிய தினேஷ் கார்த்திக் 112 ரன்கள் எடுத்தார். விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு – பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சங்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.  தொடக்க வீரர்கள் காந்தி (15), கங்கா ஸ்ரீதர் ராஜூ (4), பாபா அபராஜித் (5), விஜய் சங்கர் (2) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் தமிழ்நாடு அணி 49 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது. ஆனால் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 112 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட்டாக தமிழ்நாடு 47.2 ஓவரில் 217 ரன்கள் சேர்த்து அல்அவுட் ஆனது. மேற்கு வங்க அணி சார்பில் முஹமது ஷமி 4 விக்கெட்டுகளும், அஷோக் திண்டா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு வங்க அணியின் பேட்ஸ்மேன்கள் யாருமே நிலைத்து ஆடாததால், 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி தோல்வியடைந்தது. இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றிபெற்று, விஜய் ஹசாரே டிராபியை கைப்பற்றியது. தமிழக அணி தரப்பில் முஹமது, அஷ்வின் கிறிஸ்ட், ராஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழக அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.