இந்திய கடலோர காவல்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை – நிர்மலா சீதாராமன்

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல் படை அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மீனவர்கள் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடலோர காவல் படையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். மண்டபம் முகாம் பகுதியில் வைத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர், மீனவ பிரதிநிதிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக கடலோர காவல் படை மன்னிப்பு கேட்டது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மீனவர்கள் காட்டிய ரப்பர் குண்டு இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமானது இல்லை. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தைப்படும். தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கடலோர காவல் படையை மன்னிப்பு கேட்டிருக்கும் நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சரின் இந்த கருத்து குறித்து பேசிய  மீனவ சங்க தலைவர் ஜேசுராஜ், மத்திய அமைச்சரின் பேச்சு வேதனையை அளிக்கிறது. இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரத்தில் இருந்து 7 நட்டிக்கல் மைல் தொலைவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  தமிழக மீனவர்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படையை தாண்டி வேறு யாரும் உள்ளே வர முடியாது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்ற மீனவர்களும் பார்த்துள்ளனர். ஏற்கனவே இலங்கை கடற்படையால் அச்சுறுத்தல் இருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.