2 ஆண்டு சிறைத்தண்டனை சசிகலா கணவர் நடராஜனுக்கு உறுதி

1992ஆம் ஆண்டு, சசிகலாவின் கணவர் நடராஜன், புதிய லெக்ஸஸ் காரை,  இறக்குமதி செய்ததில் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து என்.நடராஜன், வி.என்.பாஸ்கரன், தொழிலதிபர் யோகேஷ் பாலகிருஷ்ணன், அபிராமபுரம் கிளை இந்தியன் வங்கி உதவி மேலாளர் சுஜரிதா ஆகிய நால்வர் மீதும் சி.பி.ஐ தொடர்ந்தது. இந்த வழக்கில் நான்கு பேருக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்தும், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும் நடராஜன் உள்ளிட்ட நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், சி.பி.ஐ தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த பாஸ்கரன், சீதளா தேவி ஆகியோருக்கு வேறு ஒரு சொத்துகுவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று சிறைத்தண்டனை அளித்தது குறிப்பிடத்தக்கது.