சினிமாவில் தேர்தல் திருவிழா

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான விஷயங்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோக பகுதியாகும். வசூல் முக்கியத்துவம் உள்ள திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் மால்கள் அதிகம் உள்ளது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் தான். 

திரைப்பட வினியோகத்தில் உள்ள பிரச்னைகள், பணப் பரிவர்த்தனைகள் பற்றிய முடிவுகளை எடுக்கக் கூடிய விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் எடுக்கப்படும் முடிவுகள் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரின் மேற்பார்வையில் தான் முடிவு எடுக்கப்படும். 

இத்தனை முக்கியத்துவம் மிக்க விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவர் பதவிக்கு பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். இதற்காக, தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பதவிக்கு ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.தற்போது தலைவர் பதவியில் இருக்கும் அருள்பதி, நீண்ட காலமாக இப்பொறுப்பில் இருந்து வருகிறார். இவர், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான பைனான்ஸியர் அன்பு செழியனின் ஆதரவாளர். இவரது ஒருதலைபட்சமான முடிவுகளால் தயாரிப்பாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இது போன்ற செயல்களுக்கு முடிவு கட்ட தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருக்கும் ஞானவேல்ராஜா தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியதாக தெரிகிறது.