சென்னை 2 சிங்கப்பூர் – இசையமைப்பாளர் ஜிப்ரான்

ஒரு நல்ல இசையமைப்பாளரின் தனித்தன்மை என்பது படத்தின் கதைக்கு சில அம்சங்களை சேர்த்து இசையமைப்பது மட்டுமல்ல, அதற்கு உயிர் கொடுப்பதும் தான். திரைப்படங்களுக்கு இசையின் மூலம் உயிர் கொடுப்பது என்பது ஒரு கலை, அந்த கலையில் வல்லுனராக உருவாகி வருபவர் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. 
அவரது இசையின் மூலமான கதை சொல்லலில் படத்துக்கு உயிர் கொடுத்து,  ரசிகர்களுக்கு நல்ல, மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அவரின் ‘அறம்’, தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் திரைப்படமாகவும், நல்ல இசையாகவும் சிறப்பானவையாக அமைந்தவை. 
“எந்தவொரு நல்ல திரைப்படத்திலும் உயிர் இருக்கிறது, அதை என் இசையின் மூலம் வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை. இயக்குனரின் தெளிவான சிந்தனை, சிறப்பான திரைக்கதை, திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் என அறம், தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இந்த இரண்டு படங்களுமே பின்னணி இசைக்கு என்னை நிறைய ஆராய்ச்சி செய்ய உந்தியது. நான் இதுவரை வேலை செய்த படங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு, பெருமையாகவும் இருக்கிறது. இதே போல நல்ல படங்களுக்கு  தொடர்ந்து இசையமைக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். என்னுடைய அடுத்த படம் சென்னை 2 சிங்கப்பூர் இந்த மாதம் 15 ஆம் தேதி வெளி வர உள்ளது. இந்த படத்திலும் இசைக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. படம் பார்க்கும் ரசிகர்கள் இசைப்பயணத்தை உணர்வார்கள். இந்த படத்தின் ஸ்கிரிப்டுக்கு ஏற்றவாறு படத்தை அணுகியிருக்கிறோம். இது வேகமான, ஜாலியான படம். ஒரு சில பெரிய படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன், விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.