உலக மக்கள் தொகை தினம் இன்று கடை பிடிக்கப்படுகிறது

உலக மக்கள் தொகை 760 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடை பிடிக்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மாசுபடுதல், சுகாதார பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், போக்குவரத்து நெரிசல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பலவிதமான பிரச்சினைகளை உலக நாடுகள் சந்திக்கின்றன.

எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாளை ஒரு முக்கிய தினமாக கடை பிடிக்கிறார்கள். உலகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதைய விவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி, தற்போதைய மக்கள் தொகை 129 கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. பாலின வாரியாக ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற அளவில் மக்கள் தொகை விகிதம் உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசமும், மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிமும் உள்ளது.

எழுத்தறிவு பெற்ற மாநிலத்தில் கேரளா முதலிடத்தை பெற்றுள்ளது. (93.91 சத வீதம்) மருத்துவ வளர்ச்சி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறப்பு சதவீதத்தை பிறப்பு சதவீதம் மிஞ்சி விட்டது. அந்த காலத்தை போல் இன்று ஒன்பது பத்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் நிலை இல்லை. நாமிருவர் நமக்கிருவர் என்ற நிலை மாறி நாமிருவர் நமக்கொருவர் என்ற நிலை உருவாகி உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தும் பெருகி விட்ட மக்கள் தொகை காரணமாக பிறப்பு சதவீதம் உலக அளவு சராசரியாக இருந்தாலும் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகி விடுகிறது.