மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

muthaதேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநில அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசிய அவர், மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியை தனி மாவட்டமாக உருவாக்கப் போவதாக அறிவித்தார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது நடத்தை விதிகளுக்குப் புறம்பானதாகும். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.இந்தத் தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மம்தா அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் கூறுகையில், “அசன்சோல் தனி மாவட்டமாக்கப்படும் என்று ஒரு முறை, இரு முறை அல்ல ஒரு லட்சம் முறை தெரிவிப்பேன்; தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறதோ, அதை எடுக்கட்டும் என அவர் கூறினார்.