ஐபிஎல் இறுதிப் போட்டி: மும்பையிலிருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டது

IPL

மகாராஷ்டிர மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு மும்பை உயர் நீதிமன்றம் தடைவிதித்ததைத் தொடர்ந்து, இறுதிப் போட்டி மும்பையிலிருந்து பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வறட்சி காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த சீசனுக்கான இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் நடைபெற்றது. இதில் ரைஸிங் புணே சூப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்குப் பின்னர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது ,இந்த சீசனின் இறுதிப் போட்டி மற்றும் முதலாவது தகுதிச் சுற்று போட்டிகளை பெங்களூரில் நடத்தவும், இரண்டாவது தகுதிச் சுற்று மற்றும் வெளியேற்றும் சுற்று போட்டிகளை கொல்கத்தாவில் நடத்தவும் நிர்வாகக் கவுன்சிலிடம் முன்மொழிவோம். என்றார்.

இதனிடையே, அணிகளுக்கான இடமாற்றம் குறித்த ஆலோசனையின்போது ராய்பூர், ஜெய்பூர், கான்பூர், விசாகப்பட்டினம் ஆகிய 4 இடங்கள் புணே மற்றும் மும்பை அணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில் விசாகப்பட்டினத்தை தனது அணிக்கான இடமாக ரைஸிங் புணே சூப்பர் ஜயன்ட்ஸ் அணி தேர்வு செய்துகொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கான இடத்தை தேர்வு செய்வதற்கு 2 நாள்கள் அவகாசம் கேட்டுள்ளது புனே அணியின் தேர்வையும் நிர்வாகக் குழுவின் முன்வைக்க உள்ளோம் என்று ராஜீவ் சுக்லா கூறினார். வறட்சி நிலவும் மகாராஷ்டிர மாநிலத்தில், ஐபிஎல் ஆட்டத்திற்காக மைதானங்கள் பராமரிப்புக்கு நீர் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநலன் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், போட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு பிசிசிஐக்கு உத்தரவிட்டிருந்தது.இதன்படி, 13 ஆட்டங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.