“குடும்பத்துடன் கொண்டாடும் திரைப்படம்” – சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் உற்சாகம்!

சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சூர்யாவுடன் மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விழாவில் பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஒரு ஸ்பெஷலான படம் என்றும், சூர்யாவுடன் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். இது ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பத்தினருடன் இணைந்து பார்க்கக்கூடிய ஒரு ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர் என்றும் கூறினார்.

நடிகை மமீதா பைஜூ, சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றும், அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாகவும் கூறினார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், சூர்யாவின் சொந்த மண்ணான கோவையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்நிகழ்வு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார். ‘விஸ்வநாத் & சன்ஸ்’ சூர்யாவின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவில் பேசிய பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், சூர்யாவின் ‘ஆயுத எழுத்து’ திரைப்படம் தன்னை இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும், தற்போது அவருடைய படத்திற்கு பாடல் எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். ‘பட்டாம்பூச்சி’ பாடலுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கும் நன்றி தெரிவித்தார்.

நடிகர் சூர்யா பேசுகையில், கோவையில் ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததுடன், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டு அழகான நினைவுகளை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் குடும்ப உறவுகள், காதல், நகைச்சுவை மற்றும் ஹீரோயிசம் என அனைத்தும் கலந்த ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர் இருப்பதாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் சூர்யா தெரிவித்தார்.

இறுதியாக, ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு ரசிகர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என சூர்யா கேட்டுக்கொண்டார்.