நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கும் இப்படம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகிறது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின்போது காட்சிகளை பார்த்த பொதுமக்கள் படக்குழுவினரை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுமையான கிராமத்து பின்னணியில் நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
மார்ஷல் ராபின்சன் இசையமைக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
வலுவான குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


