டிராபிக் ராமசாமி தற்கொலை முயற்சி போராட்டம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் பதவி விலக கோரி குறளகம் அருகே உள்ள வங்கி கட்டடத்தில் ஏறி தற்கொலை செய்வதாக எச்சரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக அரசுக்கு எதிராக பலமுறை குரல் கொடுத்து வந்த ராமசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

ஆனால் அது கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. இதை கண்டித்து வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிதான் அவர் போராட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்குள் இன்று குறளகம் அருகே உள்ள வங்கிக் கட்டடத்தின் 4ஆவது மாடியில் ஏறி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் ஜனாதிபதி தேர்தலை அதிமுக புறக்கணிக்க வேண்டும், அதிமுக அரசை கலைக்க வேண்டும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நாளைக்குள் முடிவு தெரிய வேண்டும்.

இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக ராமசாமி தெரிவித்துள்ளார். அங்கு போலீஸார் சென்று அவரை கீழே இறங்கக் கூறியும் அவர் இறங்கவில்லை. மேலும் தன்னை வற்புறுத்தி கீழே இறக்கினாலும் எவ்வகையிலாவது தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரை கீழே இறங்க வைக்க முயற்சி செய்துவருகிறார்கள்.