மாணவர்களுக்கு  கவர்னர் வித்யாசாகர் ராவ் வேண்டுக்கோள்

ஊட்டியில் நடைபெற்ற மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பேசுகையில், இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், பண்பாடுகளை கொண்டு விளங்கி வருகிறது. அதேபோல் சுற்றுலா தலமான ஊட்டிக்கு பல்வேறு மொழி பேசும் மக்கள் வந்து செல்கின்றனர்.  இயற்கை கொடுத்த கொடையாக நீலகிரி மலை விளங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட 24 சிகரங்கள் உள்ளன. இதில் தொட்ட பெட்டா மலை சிகரம் 2 ஆயிரத்து 637 மீட்டர் உயரம் கொண்டது. தமிழக கவர்னர் மாளிகை பொதுமக்களின் பார்வைக்கு சமீபத்தில் திறந்து விடப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பார்வைக்கு கவர்னர் மாளிகை குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் ஊட்டி மற்றும் சென்னையில் ராஜ்பவனில் உள்ள தாவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கையேடு வெளியிடப்பட்டது. இதனால் பல்வேறு மரங்களின் தகவலை நாம் அனைவரும் அறிய முடிந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மட்டும் 2 ஆயிரம் வகையான தாவரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

இதனால் தான் இந்த பூங்காவுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், பசுமையை அதிகரிக்கும் வகையிலும் ஒரு மாணவர் ஒரு மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இயற்கையை பாதுகாக்க மாணவ- மாணவிகள் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறினார்.