தினகரனின் ஜாமீன் மனு 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரத்தை பேசியதாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 25ஆம் தேதி டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை டெல்லி போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது காவல் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து டி.டி.வி.தினகரன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது தினகரன் சார்பில் ஆஜரான வக்கீல் விசாரணையை சற்று ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 26ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறினார்.