நெஞ்சை உலுக்கிய சிறுமியின் அழுகை

பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 8 மாதங்களில் காஷ்மீர் பகுதியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 55 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வார இறுதியில் மட்டும் 8 ராணுவ வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.  இரு தினங்களுக்கு முன்பு, தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் அப்துல் ரஷீத் என்ற போலீஸ் அதிகாரி, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றனர்.

அவருடைய இறுதி மரியாதை நேற்று அனந்த்நாகில் நடைபெற்றது. ராணுவத்தினர் மற்றும் காவல்துறை மூத்த அதிகாரிகள் அவருடைய உடலுக்கு மரியாதை செலுத்தினர். அங்கிருந்த ரஷீத்தின் 7 வயது மகள் ஸோஹ்ரா, தன்னுடைய தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். “எந்த தவறும் செய்யாத என்னுடைய அப்பா ஏன் கொலை செய்யப்பட்டார்?” என கேட்டு கதறினார்.  சிறுமி அழுத புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவருடைய அழுகை பலரது நெஞ்சத்தை உருக வைத்துள்ளது. அதைப் பார்த்து பலரும் தங்களது அனுதாபத்தை பதிவு செய்துள்ளனர். 

காஷ்மீரின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் “உன்னுடைய ஒவ்வொரு துளி கண்ணீரும் எங்களது நெஞ்சத்தை உலுக்குகிறது. உன்னுடைய தந்தை இந்த நாட்டுக்காக செய்துள்ள தியாகம் என்றும் போற்றப்பட வேண்டியது. இது ஏன் நடந்தது என புரியும் வயது உனக்கு இல்லை. நீ உன்னை பலப்படுத்திக்கொண்டு இந்த சமூகத்தில் உன் கனவை அடைய முயற்சிக்க வேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என கூறியுள்ளார்.