சிங்கம் 3 – சினிமா விமர்சனம்

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கமிஷனர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்கு ஆந்திர அரசு, தமிழக போலீஸின் உதவியை நாடுகிறது. எனவே, இந்த கொலையை பற்றி விசாரணை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் சூர்யா நியமிக்கப்படுகிறார். இதற்காக விசாகப்பட்டினம் வரும் சூர்யாவை விமான நிலையத்தில் இருந்தே அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பின்தொடர்கிறார் ஸ்ருதிஹாசன். அதேசமயம் சூர்யா, கமிஷனரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்குகிறார். ஒருகட்டத்தில் போலீஸ் கமிஷனர் கொலையில் பெரிய முக்கிய புள்ளிகளின் தொடர்பு இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதாவது, வெளிநாட்டிலிருக்கும் வெளிநாட்டு கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, ஒரு மர்ம கும்பல் அதை எரிக்கும்போது, காற்று மாசுபட்டு நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அந்த கும்பல் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்வதையும் அறிகிறார். இந்த கும்பலை பிடிக்க முயற்சி எடுத்த கமிஷனர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டதும் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது தெரிய வருகிறது. இதையெல்லாம் தனது போலீஸ் மூளையால் சூர்யா கண்டுபிடித்து, சட்டத்தின் முன் அவர்களை எப்படி தண்டித்ததார்? சூர்யாவை தொடர்ந்து பின்தொடரும் ஸ்ருதிஹாசனின் பின்னணி என்ன? என்பதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள். ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக ‘எஸ்-3’ படம் வெளிவந்திருக்கிறது. கடந்த இரண்டு பாகத்திலும் துரை சிங்கமாக சீறிப் பாய்ந்த சூர்யா, இந்த படத்திலும் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறார். படத்தில் எதிரிகளிடம் ஆக்ரோஷமாக இவர் பேசும் வசனங்களில் எல்லாம் அனல் தெறிக்கிறது. படத்தின் பெரும்பகுதியை இவரே ஆக்கிமிரத்திருக்கிறார். எனவே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.  ஸ்ருதிஹாசன் வழக்கம்போல் இல்லாமல் இப்படத்தில் பொறுப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அனுஷ்காவுக்கு முந்தைய பாகங்களைப் போல் இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் வந்து போவது மாதிரியான கதாபாத்திரம்.  படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் வேகமாக நகர்வதால் சூரியின் காமெடியை யோசித்து சிரிப்பதற்கே நேரம் இல்லாமல் போகிறது. இவருடன் வரும் ரோபோ சங்கருக்கும் இந்த படத்தில் சிறப்பான காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம். அதை உணர்ந்து அவர் சிறப்பாக செய்திருக்கிறார். பாடகர் கிரிஷ் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல்வாதியாக வரும் சரத் சக்சேனா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளம் வில்லனாக வரும் தாகூர் அனூப் சிங் தமிழுக்கு புதிது என்றாலும், தனது கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பால் அழகாக பதிவு செய்திருக்கிறார். முந்தைய பாகங்களில் நடித்த ராதாரவி, யுவராணி, நாசர், விஜயகுமார் ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறார்கள். 
முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகத்தையும் இயக்குனர் ஹரி, பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போயிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காட்சிகளின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த வேகம் ஒருகட்டத்தில் சலிப்படைய செய்துவிடுகிறது.  கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். வி.டி.விஜயன், டி.எஸ்.ஜாய் ஆகியோர் படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் வேகத்தை சற்று குறைத்து ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் ரசிப்பதற்கு நேரம் கொடுத்திருக்கலாம். பிரியனின் ஒளிப்பதிவில் சண்டை காட்சியில் கேமரா சுழன்று விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பார்க்கவும், ரசிக்கவும் வைக்கிறது. பின்னணி இசையில் வழக்கம்போல்  படத்திற்குண்டான வேகத்தையும், விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறார்.