இங்கிலாந்துடன் இந்தியாவுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு, டோஹா வங்கியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ஆர்.சீத்தாராமன் பேச்சு

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியுள்ள பிரிட்டனுடன்  இந்தியா  வரியற்ற வர்த்தக உடன்படிக்கை (எஃப்டிஏ) செய்து கொண்டால்  இந்தியாவில் உள்ள  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எஸ்எம்இ) அந்நாட்டில் சிறந்த வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்று டோஹா வங்கியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆர்.சீத்தாராமன் கூறியுள்ளார். இந்திய அரசின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் விருது பெற்ற  டாக்டர் ஆர்.சீத்தாராமனுக்கு சென்னையில் வெள்ளியன்று (பிப். 10) இயக்குநர்கள் பயிற்சி நிலையத்தின்  சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திரு.சீத்தாராமன்,“ உலக பொருளாதார கொள்கைகள் – மாறிவரும் சூழலில் இந்திய பொருளாதாரத்திற்கு உள்ள வாய்ப்புகளும் அச்சுறுத்தல்களும்’’  என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதால் அந்நாட்டுடன் வரியற்ற வர்த்தக உடன்படிக்கைக்கு இந்தியா முயற்சிக்கவேண்டும். இதனால் அந்நாட்டுடன் இந்தியாவுக்கு வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும். சமீப காலமாக இந்தியா பிரிட்டன் இருதரப்பு வர்த்தகத்தில் உபரி காணப்படுகிறது. அந்த நாட்டுடன் இந்தியா சரக்கு, சேவைத்துறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இருதரப்பு வர்த்தக உடன்பாட்டை செய்துகொள்ள இதுவே சரியான நேரம். மேலும் வரியற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக மிக விரைவில் இந்தியாவுடன் மீண்டும் பேச்சு நடத்த ஐரோப்பிய யூனியனும் தயாராக உள்ளது என்றார்.

சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட ஜிசிசி எனப்படும் வளைகுடா நாடுகளுடன்  இந்தியாவுக்கு உள்ள பொருளாதார வாய்ப்புகளையும் டாக்டர் ஆர்.சீத்தாராமன் வலியுறுத்தி கூறினார். வர்த்தகம் மற்றும் இதர துறைகளில் இந்நாடுகளு டன் இந்தியா கொண்டுள்ள உறவை தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். 2015-16 ஆம் நிதியாண்டில் ஜிசிசி நாடுகளுடன் இந்தியாவுக்கு உள்ள வர்த்தகம் சுமார் 100 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம்  இந்தியாவும் ஐக்கிய அரபு குடியரசும் (யுஏஇ) சைபர்  பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு,  முதலீடு, காப்பீடு உள்ளிட்ட விரிவான எழு ஒப்பந்தங்களை செய்து கொண்டன.

மேலும் அடுத்த ஐந்தாண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 60 சதவீதத்திற்கு அதிகரிப்பதை இலக்காக கொண்டு புதிய துறைகளை அடையாளம் காணவும் குறிப்பிடத்தக்க அளவு முதலீட்டை அதிகரிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இருதரப்பிலும் இலக்கை அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளால் 2020இல் இருதரப்புவர்த்தகம் 60 சதவீதம் அதிகரிக்கும்.  இந்தியாவும் கத்தாரும் நிறுவனங்களை துவக்குதல்,  ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், கச்சா எண்ணை எடுத்தல் ஆகியவற்றில்  கூட்டாக முயற்சிக்கலாம். கத்தார் துறைமுகங்களில் இந்தியா முதலீடு செய்யலாம். 2022இல் கத்தாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக மேற்கொள்ளப்படும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் இந்திய நிறுவனங்கள் ஈடுபடலாம். மேலும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தடுத்தல் உள்ளிட்ட துறைகளிலும் இருநாடுகளும் இணைந்து செயல்பட நல்ல வாய்ப்புகள் உள்ளன என்றும் டாக்டர் ஆர்.சீத்தாராமன் கூறினார்.