சிக்னல் அட் 11:30 – விமர்சனம்

காதல், குடும்ப உறவு, காணாமல் போன சிறுமி, மறைக்கப்பட்ட ரகசியங்கள் எனப் பல முடிச்சுகளுடன் மர்மத் திரில்லராக உருவாகியிருக்கிறது ‘சிக்னல் அட் 11:30’.

கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் சித்தார்த் (சந்தோஷ் பிரதாப்), மருத்துவரான தாரா (பூஜிதா பொன்னாடா) இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணத்தில் முடிகிறது. ஒருபுறம் இவர்களது குடும்ப வாழ்க்கை நகர, மறுபுறம் தனது மகள் ஹாசினியைக் காணவில்லை என காவல்துறையின் உதவியை நாடுகிறார்  தந்தை (ஜெயப்பிரகாஷ்). ஆரம்பத்தில் தொடர்பில்லாத இரு சம்பவங்களாகத் தோன்றும் இவை, போகப்போக ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன.

காணாமல் போன ஹாசினியின் பின்னணி என்ன? சித்தார்த்துக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு? தாராவின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் ரகசியங்கள் என்ன? எனப் பல கேள்விகளை எழுப்பி, ஒவ்வொன்றாக முடிச்சுகளை அவிழ்க்கிறது திரைக்கதை.

இயக்குநர் மலர்விழி நடேசன் கதையை நேர்கோட்டில் சொல்லாமல், வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களை முன்பின்னாக இணைத்திருப்பது படத்தின் சுவாரஸ்யமான அம்சம். தொடக்கத்தில் புரியாத பல காட்சிகளுக்குப் பின்னர் விளக்கம் கிடைக்கும்போது, அந்தச் சம்பவங்களைப் பார்வையாளர்கள் வேறொரு கோணத்தில் அணுக முடிகிறது.

கதாபாத்திரங்களின் உண்மையான முகத்தையும் நோக்கத்தையும் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தாமல், படிப்படியாக மர்மத்தை விலக்குவது சிறப்பு. குறிப்பாக, முக்கியமான தகவல்களை வசனங்களின் வழியாகத் திணிக்காமல் காட்சிகளின் மூலமாகவே சொல்லியிருப்பதும் சிறப்பு. 

சந்தோஷ் பிரதாப் சித்தார்த் கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை வழங்கியுள்ளார். வெளித்தோற்றத்தில் இயல்பாக இருந்தாலும், மனதிற்குள் பல ரகசியங்களைச் சுமக்கும் மனிதராகத் தனது முகபாவனைகளால் கவனம் ஈர்க்கிறார்.

பூஜிதா பொன்னாடா தாரா கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பவ்யா திரிகா ஹாசினியாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக, கதையின் முக்கியமான தருணங்களில் அவரது பங்களிப்பு பாராட்டுக்குரியது.

மகளைக் காணாமல் தவிக்கும் தந்தையாக ஜெயப்பிரகாஷ் மிக இயல்பாக நடித்துள்ளார். மகள் மீதான பாசத்தையும், அவரைத் தேடி அலையும் பதற்றத்தையும் தனது நடிப்பில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். முனீஷ்காந்தின் சிறப்புத் தோற்றமும் படத்திற்கு கூடுதல் சுவை சேர்க்கிறது.

டி. இமானின் இசை படத்தின் உணர்வுகளுக்கு நல்ல துணையாக இருக்கிறது. குறிப்பாக, தந்தை – மகள் உறவை மையப்படுத்தி அமைந்துள்ள ‘ஜோ ஜோ மா’ பாடல் மனதைத் தொடுகிறது. ஜெயப்பிரகாஷ் மற்றும் பவ்யா திரிகாவின் உணர்ச்சிகரமான நடிப்புடன் பாடலின் காட்சியமைப்பும் அழகாகப் பொருந்தியுள்ளது.

பின்னணி இசை மர்மமான காட்சிகளுக்குத் தேவையான பதற்றத்தை உருவாக்குகிறது. கொடைக்கானலின் இயற்கை அழகையும் கதைக்குத் தேவையான இருண்மையான சூழலையும் ஒளிப்பதிவு நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது. ஒலியமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன.

மர்மமும் பதற்றமும் நிறைந்த கதையில் சில இடங்களில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகள் கதையின் தீவிரத்திற்குப் பொருந்தவில்லை. குறிப்பாக, அலுவலகம் மற்றும் விசாரணை தொடர்பான சில காட்சிகள் திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கின்றன.

படத்தின் பெரும்பகுதி பல கேள்விகளை எழுப்பி, அடுத்தடுத்த திருப்பங்களுக்காகப் பார்வையாளர்களைக் காத்திருக்க வைக்கிறது. ஆனால், இவ்வளவு நேரம் கட்டமைக்கப்பட்ட மர்மத்திற்கு இறுதியில் கிடைக்கும் தீர்வு இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். கிளைமாக்ஸில் எதிர்பார்த்த தாக்கம் கிடைக்காதது சிறிய ஏமாற்றம்.

மர்மம், உளவியல், காதல், குடும்பப் பாசம் எனப் பல அம்சங்களை ஒன்றிணைத்து வித்தியாசமான திரில்லர் அனுபவத்தைத் தர முயன்றிருக்கிறது ‘சிக்னல் அட் 11:30’. சுவாரஸ்யமான திரைக்கதை உத்தி, நடிகர்களின் இயல்பான நடிப்பு, இமானின் இசை ஆகியவை படத்தின் பலம். ஆங்காங்கே வரும் தேவையற்ற நகைச்சுவையும், எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யாத கிளைமாக்ஸும் பலவீனம்.

‘சிக்னல் அட் 11:30’ – மர்ம முடிச்சுகள் நிறைந்த ஒருமுறை பார்க்கக்கூடிய திரில்லர்!