ஜெடுசி – விமர்சனம்

சில முக்கியப் புள்ளிகளைக் குறிவைத்து கொலை முயற்சிகளில் ஈடுபடும் நாயகன் ஸ்ரீதர், ஒரு கட்டத்தில் காவல்துறையிடம் சிக்கி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அங்கு தான் ஏன் குறிப்பிட்ட நபர்களைக் கொலை செய்ய முயன்றேன் என்பதற்கான காரணங்களை நீதிபதியிடம் விளக்குகிறார். அந்த விளக்கத்தின் பின்னால் ஒரு மனிதனின் வாழ்க்கையும், அதில் புதைந்திருக்கும் வலிகளும் மகிழ்ச்சிகளும் வெளிப்படுகின்றன. அவர் எடுத்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பதுதான் படத்தின் மையக்கதை.

நாயகன் ஸ்ரீதர் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஓரளவுக்குச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். இருப்பினும், கதையின் முக்கியமான உணர்ச்சிகரமான தருணங்களில் இன்னும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். ஸ்வேதா இயல்பான நடிப்பை வழங்க முயற்சித்துள்ளார்.

சினியுதனின் நடிப்பு படத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. ஏற்கெனவே ‘ஒன்ஸ் அபான் டைம் இன் மெட்ராஸ்’ படத்தில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தவர், இந்தப் படத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். பவா செல்லத்துரை தனது அனுபவம் நிறைந்த இயல்பான நடிப்பால் கவர்கிறார். பிளாக் பாண்டி சிறப்பாக நடித்துள்ளார். ஜெயந்திமாலா, வெங்கடேஷ், அருவி மதன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்களது பணியைச் செய்துள்ளனர்.

விக்னேஸ்வரனின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நாக அர்ஜுன் V.S-ன் ஒளிப்பதிவு எளிமையான பாணியில் பயணிக்கிறது. இருப்பினும், கதையின் முக்கியத்துவத்திற்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப காட்சியமைப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஷுவல் ரீதியாகப் படம் இன்னும் தரமாக இருந்திருக்க வேண்டியது அவசியம்.

இயக்குநர் நட்ராஜ் ஏகாம்பரம் கையில் எடுத்திருக்கும் கதையில் வலுவான சமூகக் கருத்து இருக்கிறது.

பெண்களின் கேள்வி கேட்கும் உரிமையைப் பறித்து, அவர்களைத் தங்களின் அதிகாரத்தால் அடக்க நினைக்கும் மனிதர்களுக்கு எதிராக வலுவான கருத்தை முன்வைத்திருக்கிறது ‘ஜெடுசி!’. காலம் காலமாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் படம் பதிவு செய்கிறது.

பெண்களின் கண்ணியத்தையும் உரிமையையும் வேட்டையாடுபவர்களுக்கு எதிராகப் பேசும் அந்த அடிப்படைக் கருத்துக்காகப் படத்தைப் பாராட்டலாம்.