ரூபாய்  50,000 பரிட்சையில் காப்பி அடித்தால் அபராதம்

தேர்வின்போது, மாணவர்கள் காப்பி அடிப்பது என்பது காலங்காலமாக நடைபெறும் ஒன்றுதான். ஆனால், தற்போது சில பள்ளி, கல்லூரி நிர்வாகமே மாணவர்களை காப்பி அடிக்க ஊக்குவிக்கிறது. இதுபோன்ற முறைகேடுகளில் சில கல்லூரிகள் ஈடுபடுவதாக சென்னை பல்கலைக் கழகத்துக்கு புகாரும் சென்றது. இதைத் தொடர்ந்து, காப்பி அடிக்க ஊக்குவிக்கும் கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்க சென்னை பல்கலைக் கழக தோ்வாணையக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இதனை தொடர்ந்து சென்னை பல்கலை கழகம் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்வில் பார்த்து எழுத அனுமதித்ததாக புகாருக்கு ஆளான நான்கு கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை காப்பி அடிக்க ஊக்குவித்தல் போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் கல்லுாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, தேர்வு மையங்கள் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்” என்றார். 

சினிமாவில் வரும் காட்சியைப்போல, சமீபத்தில் நடந்த தேர்வில் மாணவர் ஒருவர் விடை தாளுடன் ரூ.500ஐ இணைத்து வைத்து, அதில் தனது மொபைல் நம்பரையும் குறிப்பிட்டு ‘எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ என, தெரிவித்துள்ளார். இது போன்ற அத்துமீறல் செயல்களைத் தவிர்க்க இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.