ஜி.எஸ்.டி. வரியுடன் தமிழக அரசின் கேளிக்கை வரியையும் சேர்த்து இரட்டை வரி செலுத்த முடியாது என்று தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கேளிக்கை வரியை ரத்து செய்ய வற்புறுத்தி சினிமா தியேட்டர்களை காலவரையின்றி மூடுவதாக அறிவித்து நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தியேட்டர்களை மூட வேண்டாம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்த வேண்டுகோளையும் அவர்கள் ஏற்கவில்லை. திருத்தணியில் இருந்து கன்னியாகுமரி வரை மொத்தம் 1,000 தியேட்டர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் மட்டும் வணிக வளாகங்களில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன.
அனைத்து திரையரங்குகளிலும் தினமும் காலை, மதியம், மாலை, இரவு என்று 4 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 காட்சிகள் திரையிடப்பட்டன. நேற்று 4 காட்சிகளையும் ரத்து செய்துவிட்டனர். தியேட்டர்களை இழுத்து மூடி அதன் முன்னால் தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று போர்டில் எழுதி ஒட்டி இருந்தனர். படம் பார்க்கும் ஆவலில் வந்த ரசிகர்கள் பலர் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள்.
இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால் நேற்று ஒரே நாளில் மட்டும் டிக்கெட் கட்டணமாக வசூலாக வேண்டிய ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தியேட்டர் கேண்டீன், மற்றும் வாகனங்கள் ‘பார்க்கிங்’ கட்டணம் மூலம் சராசரியாக தினமும் ரூ.5 கோடி வசூலாகும்.
அதையும் சேர்த்து மொத்தம் ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. 1,000 திரையரங்குகளிலும் ஆபரேட்டர்கள், டிக்கெட் கொடுப்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கேண்டீன், பார்க்கிங் ஊழியர்கள், என்று 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அவர்கள் வேலை இழந்துள்ளனர்” என்றார்.