பணம் எடுக்க விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கருப்பு பணம் பதுக்குதல், கள்ளநோட்டு புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி போன்ற குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் மதிப்பு கொண்ட இந்த நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களிலும் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் இருந்து மக்கள் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விதித்தன. பின்னர் இந்த பணத்தட்டுப்பாட்டை போக்க புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டன.

இதனால் பணத்தட்டுப்பாடு மெல்ல மெல்ல நீங்கியதுடன், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களிலும் நிலைமை ஓரளவு சீரடைய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் கடந்த மாதம் 1ஆம்தேதி நீக்கப்பட்டன. சேமிப்பு கணக்கில் இருந்து வாரந்தோறும் எடுக்கும் உச்சவரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி கடந்த மாதம் 20ஆம்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.மேலும் விரைவில் நிலைமை முற்றிலும் சீரடையும் என அறிவித்து இருந்த ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 13ஆம் தேதிக்குப்பின் (நேற்று) விலக்கிக்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.  இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுப்பதற்கு நவம்பர் 8ஆம் தேதிக்கு முன் எந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அவை அனைத்தும் தற்போது அமலுக்கு வந்துள்ளன.

இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் மட்டும் கடந்த சில நாட்களாக அமலில் இருந்தது. தற்போது பணப்புழக்கம் சீரடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றார். புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘தற்போது வெளியாகி இருக்கும் கள்ள நோட்டுகள் வெறும் புகைப்பட நகல்கள்தான். இது கள்ளநோட்டு அல்ல. இதை சாதாரண மனிதர்களாலும் கண்டுபிடிக்க முடியும். அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டு உள்ள புதிய நோட்டுகளை கள்ள நோட்டாக தயாரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல’ என்றார்.