தடையை மீறி நுழைந்த ராகுல் காந்தி, கைது செய்த போலீஸ்

 

உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.  போராட்டத்தின்போது சாலைகளில் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் வன்முறையும் நடைபெறுகிறது. மந்த்சார் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மந்த்சார் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மந்த்சார் மாவட்டத்திற்கு சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி புறப்பட்டு வந்தார்.

ஆனால், தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உள்ளதால், ராகுல் காந்தியை மந்த்சார் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு திட்டவட்டமாக கூறினார். மாவட்டத்திற்குள் நுழைய அவர் முயற்சி செய்தால், அவர் தடுத்து வைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார். இருப்பினும் ராகுல் தனது பயணத்தை தொடர்ந்தார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து மத்திய பிரதேசம் நோக்கி சாலை மார்க்கமாக பயணம் செய்தார். அவருடன் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், மத்திய பிரதேச எம்.எல்.ஏ. ஜெய்வர்தன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வந்தனர். நீமுச் நோக்கி சென்ற அவரை நயா கான் என்ற இடத்தில் போலீசார் தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி பேரிகார்டுகளை தாண்டிச் சென்ற ராகுல் காந்தி, மோட்டார் சைக்கிளில் ஏறி புறப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சென்றனர். இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் அவருடன் வந்த அனைவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

கைது செய்வதற்கு முன்னதாக ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது ‘மோடியால் பணக்காரர்களுக்கு மட்டும் ரூ.1.50 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியும். ஆனால், விவசாயிகளுக்கு செய்ய முடியாது. விளைபொருட்களுக்கு அவரால் சரியான விலை கொடுக்க முடியாது, போனஸ் கொடுக்க முடியாது, இழப்பீடு வழங்க முடியாது. துப்பாக்கி தோட்டாக்களை மட்டுமே வழங்க முடியும். மந்த்சார் மாவட்டத்தில் விவசாயிகள் இறந்ததற்கு பிரதமர் மோடியும், மாநில முதல்வர் சிவராஜ் சவுகானும்தான் பொறுப்பாளிகள்.’ என்றார். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஒரு விருந்தினர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி கூறுகையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க விடாமல் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசு என்னை தடுக்கும் பணியை சிறப்பாக செய்துள்ளது’ என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.