இன்று முதல் பெப்சி, கோக் தடை புதுச்சேரியில் அமலுக்கு வந்தது

புதுச்சேரியில் பெப்சி, கோக் மற்றும் அதனைச் சார்ந்த வெளிநாட்டு குளிர்பானகள் இன்று முதல் கடைகளில் விற்பனை செய்யப்படவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது வெளிநாட்டு குளிர்பானகள் விற்கவேண்டாம் என மாணவர்கள் கோரிக்கைவிடுக்கப்பட்டது. இதனால் தமிழக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அயல்நாட்டு குளிப்பானங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக கடைகளில் விற்கமாட்டோம் என்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து , கடந்த 19ஆம் தேதி புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மார்ச் 1ஆம் தேதி முதல் பெப்ஸி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை 55 சங்கங்களில் செயல்படும் 25,000 கடைகளிலும் விற்பதில்லை என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பெப்ஸி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்கவில்லை. மேலும் வணிகர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் இயக்கப்படும் கடைகளில் பெப்ஸி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் இன்று முதல் புதுச்சேரியில் விற்கப்படவில்லை .