நெடுவாசல் போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும், மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார். விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 14 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 11 பேர் கொண்ட நெடுவாசல் போராட்டக் குழு ஒன்று தலைமைச் செயலகம் வந்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது.
அப்போது, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று பழனிச்சாமி உறுதி அளித்ததாக போராட்டக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

முதல்வர் அளித்த உறுதியை ஏற்க மறுத்த நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி மறுத்து முறையான அறிக்கை வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மக்கள் அறிவித்தனர். இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போராடும் நெடுவாசல் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும் போராட்டத்தை கைவிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.