போயஸ்கார்டனில் பலத்த போலீஸ் குவிப்பு

‘வேதா இல்லம்’ நினைவு இல்லமாக ஆக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம், நினைவு இல்லமாக ஆக்கப்படும் என்றும், அவரது மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரம் முதலே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போயஸ்கார்டன் பகுதியில் போலீஸ் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த சாலை வழியாக செல்ல வெளி நபர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அப்பகுதியில் ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகு ஆகியோர் மேற்பார்வையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் போயஸ்கார்டன் பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கும் பின் போயஸ்கார்டன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இரு மாதங்களுக்கு முன் போயஸ்கார்டன் வீட்டுக்கு முன் திடீரென போராட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து நேற்று முதலமைச்சர் போயஸ்கார்டன் நினைவு இல்லமாக ஆக்கப்படும் என்ற அறிவிப்பை விடுத்ததையடுத்து அங்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.போயஸ்கார்டன் இல்லத்தின் முக்கியத்தும் மற்றும் பாதுகாப்புக்கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.