எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. மேலும் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. கடந்த வாரம் நாகை மீனவர்களை தொடர்ந்து இரு நாட்கள் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 37 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. வருகிற டிசம்பர் 5ம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.