ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என திமுக சார்பில் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. முன்னதாக திமுக அளித்த மனுவில், “ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். எனவே போலி வாக்காளர்களின் பெயரை உடனே நீக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஒரு தேர்தலில் ஐம்பது, நூறு வாக்குகள் கூட வெற்றியைத் தீர்மானிக்கும் என திமுக சார்பில் வாதம் செய்யப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஆர்.கே. நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்களை நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையையும் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. மேலும், போலி வாக்காளர்கள் பட்டியல், நாளை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏற்றப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளது. 

இதனையடுத்து, குறைவான கால அளவு உள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திமுக தொடர்ந்த மற்றொரு வழக்கும் விசாரிக்கப்பட்டது. திமுக வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்தல் பணிகளை தொடர முடியவில்லை என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கூறியது. இதற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம், “திமுக கோரிக்கைப்படி ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் பணிகளை தொடங்கலாம். முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டது போல் ஆர்.கே.நகர் தேர்தல் வருகிற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என  உத்தரவிட்டுள்ளது.