நாளை முதல் நடத்த இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

 

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் முறையினை எதிர்த்து நாளை முதல் நடத்த இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் இந்த விலை நிர்ணயத்தைச் செய்து வருகின்றன. இந்த நடைமுறையை மாற்றி, சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி முதற்கட்டமாக, உதய்பூர், ஜாம்செட்பூர், விசாகப்பட்டினம், சண்டிகார், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த முறையை அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த அறிவிப்புக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 16 ஆம் தேதி முதல், பங்க்குகளை மூடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, அகில இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரபாகர் ரெட்டி நேற்று( ஜூன் 14) சந்தித்து பேசினார். பேச்சு வார்த்தையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை நள்ளிரவுக்குப் பதிலாக காலை 6 மணிக்கு நிர்ணயம் செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.