பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலைமறியல்

 

தொடர்ந்து புகார்களில் சிக்கியதாகவும், ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், 60 மாணவர்களை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காளிராஜ் கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்தார். அவர்களின் பெற்றோர் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். சுமார் 40 பேர், கல்லூரிக்கு எதிரில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது மாணவர்கள் சிலர் போலீசாரின் வாகனங்கள் மற்றும், அவ்வழியே சென்ற பொதுமக்களின் வாகனங்களை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி களைத்தனர். தடியடிக்கு பயந்து போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தப்பி ஓடிய நிலையில், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரியின் இரண்டு நுழைவுவாயிலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.