ஆப்பிள் நிறுவனம், புதிய ஐபேட் சாதனங்கள் அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் மற்றும் புதிய ஐபேட் உள்ளிட்ட சாதனங்களை வெளியிட்டுள்ளது. புதிய ஐபேட் சாதனங்கள் மார்ச் 24 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகின்றது. ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபேட் 9.7 இன்ச் திரை கொண்ட மாடல் 329 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 21,528 என இதுவரை இல்லாத அளவு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
9.7 இன்ச், 32 ஜிபி மெமரி, வை-பை கொண்ட ஐபேட் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை ரூ.28,900 என்றும், 32ஜிபி, வை-பை மற்றும் செல்லுலார் மாடல் ரூ.39,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி மெமரி கொண்ட ஐபேட் மினி 4 விலை 399 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபேட் சாதனங்களில் அதிவேக A9 சிப் மற்றும் பிரகாசமான திரை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஐபேட் ஏர் 2-வை விட சற்றே பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களின் சிவப்பு நிற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதே போல் ஐபோன் SE மாடல் 32 மற்றும் 128 ஜிபி மெமரிக்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய சாதனங்களுடன் வீடியோக்களை உருவாக்கி, அதனை ஐஓஎஸ் சாதனங்களை பயன்படுத்தும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கும் செயலியையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. கிளிப்ஸ் (clips) என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியில் வீடியோக்களை அழகாக்க பல்வேறு வசதிகளும், இவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது ஆப்பிளின் சொந்த குறுந்தகவல் செயலிகளில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.