மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை

60 வயது நிரம்பிய ஆண்களும், 58 வயது நிரம்பிய பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள். ரெயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களுக்கு ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெற மூத்த குடிமக்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட்டில் சலுகை பெற ஆதார் கட்டாயம் என ரெயில்வே துறை அறிவித்தது.

ஆனால் இப்போது, ரெயிலில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு மக்களவையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் பிரபு கூறுகையில் “ ரெயில் டிக்கெட்டில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை. ஜனவரி 1 முதல் மூத்த குடிமக்கள் குறித்த தகவல்களை ஆதார் அடிப்படையில் ரெயில்வே துறை சேகரித்து வருகிறது.

எந்தவித முறைகேடுகளும் நடைபெறக்கூடாது என்பதற்காக இதனை சேகரித்து வருகிறோம்.  மிண்ணனு பரிவர்த்தனையில் டிக்கெட் பதிவு செய்வதே எங்களது இலக்கு. எனினும் பணப்பரிவர்த்தனையை குறைக்கும் முயற்சிக்கு தற்போது முன்னுரிமை கொடுத்து வருகிறோம்” என்றார்.