மகள் கற்பழிக்கப்பட்டதாக எந்த பெற்றோரும் பொய் சொல்ல மாட்டார்கள், என டெல்லி நீதிமன்றம் கருத்து

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியை சேர்ந்தவர் சோனு(26). டெல்லியில் வசித்து வரும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரைத் தேடிய பெற்றோர் சோனுவின் அறையில் அவரைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக டெல்லி போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட சோனுவின் வழக்கறிஞர் சிறுமியின் தாயார் சோனுவிடம் பணம் வாங்கியதாகவும் சோனு அதனைத் திருப்பி கேட்டதால் அவர் இவ்வாறு குற்றம் சாட்டுவதாகவும் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் ஷர்மா, “தங்கள் மகள் கற்பழிக்கப்பட்டதாக எந்த பெற்றோரும் பொய் சொல்ல மாட்டார்கள். சிறுமியின் தாயார் சோனுவிடம் பணம் வாங்கியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. இந்த வழக்கில் குற்றவாளி சோனுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன்” என தீர்ப்பு வழங்கினார்.