இளையராஜாவின் செயலுக்கு கங்கை அமரன் கண்டனம்

தனது பாடல்களை இனி மேடைகளில் பாடக்கூடாது என்று இசையமைப்பாளர் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனிமேல் இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இளையராஜாவின் தம்பியும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இளையராஜாவின் இந்த முடிவு தவறானது. மாணிக்க வாசகர், வள்ளலார் போன்றவர்கள்கூட எங்களுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள் என்று சொன்னதில்லை. அப்படியிருக்கையில் உங்களுக்கு ஏன் இந்த ஆசை.  இனிமேலும் சம்பாதித்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். உங்களுக்கு அந்தளவுக்கா பணக் கஷ்டம் வந்துவிட்டது. இசையை நாம் வியாபாரமாக்கக்கூடாது.

பாடல் இசையமைத்ததற்கான சம்பளத்தை ஏற்கெனவே நாம் வாங்கிவிட்டோம்.  நம்முடைய பாடல்களை பாடுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால் அது நமக்குத்தானே பெருமை. நீங்கள் பாடல்களுக்கு இசையமைத்தது மக்கள் பாடுவதற்காகத்தானே. அப்படி பாடக்கூடாது என்றால் எதற்காக இசையமைக்க வேண்டும். நீங்கள் இப்படி செய்வது அசிங்கமாக உள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருக்கிறார் கங்கை அமரன்.