மாம் பிரஸ் ரிலிஸ்

 

திரைப்படத்தை பற்றி

ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிடவேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள். தேவகி சபர்வால் கணவர் ஆனந்த் மற்றும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும் பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ ஒரு தாயுள்ளத்தின் உண்மையான மனமகிழ்ச்சியை தான் இன்னும் உணரவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. ஆரியாவால் தன் தந்தையிடம் காட்டும் நெருக்கத்தை தன் தாயிடம் காட்ட இயலவில்லை. ஒரு மகள் தன்னுடைய தாயின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெறுகிறாள், ஆனால் ஒரு தாய் தன்னுடைய மகளின் வாழ்வில் அத்தணை முக்கியத்துவம் பெறுவதில்லை என ஆர்யா திடமாய் நம்புகிறாள். வார்த்தைகளால் சொல்லாவிடினும், ஒரு தாய்க்குத் தானே தெரியும் தன் மகளை பற்றி என்று, தேவகியும் தன் மகள் ஒரு நாள் புரிந்துகொள்வாள் என பொறுமையாகக் காத்திருக்கிறாள்.

இந்த சூழலில் திடீரென நடந்த ஒரு கொடூரமான நிகழ்வு, இருவருக்குமிடையேயான உறவில் சரி செய்ய முடியாத ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. தேவகி முன் இருப்பது, சரி எது தவறு எது என்பதல்ல. எது தவறு எது சரியல்ல என்பதே. இந்த போராட்டத்தில், தேவகி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பும், எடுக்கும் முடிவுகளும் மட்டுமே, அவளுக்கு தன் மகள் ஆர்யாவின் அன்பைப் பெற்று தரும்.

கதாபாத்திரங்களைப் பற்றி

ஸ்ரீதேவி கபூர்

ஸ்ரீதேவி கபூர் முக்கிய கதாபாத்திரமான தேவகி சபர்வாலாக நடித்துள்ளார். இரு அழகான பெண் குழந்தைகளின் தாயாய், ஒரு வேலைக்கு போகின்ற வயதான பெண்மணியாய் உலா வருகிறார். அவளுக்கு புரிதலுக்கும், அனுதாபத்திற்கும் உள்ள வேறுபாடு நன்றாகத் தெரியும். தேவகிக்கும் ஆர்யாவுக்கும் இடையே இருக்கும் இந்த உள்ளார்ந்த அடிப்படை பதற்றத்தை எவ்வளவு முயன்றும் குறைக்க முடியவில்லை. இந்த நேரத்தில், ஆர்யாவின் வாழ்வில் ஏற்பட்ட அந்த கொடூர சம்பவம், அவளைப் புரட்டிப் போட்டு விட, தேவகி அத்தனை எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்துப் போராடி தன் மகளின் அன்பை பெறுகிறாள்.

அக்ஷய் கண்ணா

மேத்யு பிரான்சிஸ், எனும் ஒரு குற்றபிரிவு காவல்துறை அதிகாரியாக அக்ஷய் கண்ணா களமிறங்குகிறார். ஒரு குற்றவாளி விடுதலையானால் அடையும் வெறுப்பை விட, வேறு யாராவது தன் வேலையை செய்தால் அதிக வெறுப்படைபவர். நேர்மையும், சுயநீதியும் கொண்ட மேத்யு, தன் வாழ்வின் மிக கடினமான, ஒரு சவாலான ஒரு வழக்கோடுப் போராடிக் கொண்டிருக்கிறார். தன் வாழ்நாளில் முதன் முறையாக ஒரு குற்றத்தைத் தன்னால் நிரூபிக்க முடியவில்லை என்பதை அவர் உணர ஆரம்பிக்கிறார்.

அத்னான் சித்திக்

தேவகியின் கணவர், ஆனந்த் சபர்வாலாக அத்னான் சித்திக் வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மனைவியின் மீதும், இரு மகள்களின் மீதும், நிபந்தனையற்ற நிறைவான அன்பு செலுத்தும் ஒரு மனிதர். அந்த துயர சம்பவம் நிகழ்ந்த போது, தன் மகளுக்கு ஒரு நம்பிக்கையாய், பலமாய், தைரியம் சொல்லித் தேற்றி வருகிறார்.

சஜல் அலி

ஆர்யா சபர்வாலாய் சஜல் அலி நடித்துள்ளார். எளிதில் உணர்ச்சி வசப்படும் ஆர்யா, தன் தந்தையிடம் பேரன்பு கொண்டிருகிறாள். தன்னுடைய தங்கை, பிரியாவை அன்புடன் வரவேற்கும் ஆர்யாவால், ஏனோ தன்னுடைய தாயை ஏற்று கொள்ள முடியவில்லை. உற்சாகமாகவும், கொஞ்சம் முரட்டு புத்திசாலித் தனத்துடனும் வலம் வரும் ஆர்யா, அந்த துயர சம்பவத்திற்கு பின் உடைந்து, நொறுங்கிப் போகிறாள். நம்பிக்கையைத் தேடித் தன் வாழ்வின் மீதியையும் தொலைத்துக் கொண்டிருக்கிறாள்.

 

ரீவா அரோரா

தேவகியின் இளைய மகள் பிரியா சபர்வாலாய் ரீவா அரோரா வருகிறார். இந்த துறுதுறு சுறுசுறு அழகி, அனைவரது கண்களையும் கவனத்தையும் கவர்ந்து, கலகலப்பூட்டும் ஒரு பைங்கிளி. பிரியா குடும்பச் சூழலில் ஏதோ ஒரு அசௌகரியம் நிலவுவதைப் புரிந்துகொண்டு, சிரிப்பையும், சந்தோஷத்தையும் மீட்க முயற்சிக்கிறாள்.

சிறப்பு வேடத்தில் நவாசுதீன் சித்திக்

தயாசங்கர் கபூர், சுருக்கமாக – டிகே என எல்லோராலும் அழைக்கப்படும் வேடத்தில், நவாசுதீன் சித்திக் மிளிர்கிறார். தார்யகஞ்ச்சின் மிக நெருக்கடியானப் பகுதியில் தூசிபடிந்த ஒரு சிறிய அலுவலகத்திலிருந்து கொண்டும், ஒரு ஆபத்தான ஸ்கூட்டரில் பயனித்துகொண்டும், சிறிய அளவிலான துப்பறியும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு துப்பறியும் நிபுணர். நகைச்சுவையான இவர், உணர்ச்சிவயப்பட்டு தன்னுடைய சக்திக்கு மீறிய ஒரு வழக்கில் தன்னை இணைத்து கொள்கிறார்.

தயாரிப்பாளர் – போனி கபூர்

எல்லோராலும் வெகுவாக பாராட்ட பெற்ற மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் தயாரிப்பாளர். இந்திய திரையுலகின் “நூற்றாண்டு கண்ட இந்திய சினிமா” விழாவில் சேகர் கபூரால் இயக்கப்பெற்ற இத்திரைப்படம், சிறந்த நூறு படங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கபட்டு கௌரவிக்கப்பட்டது. வணிக நோக்கில் வெற்றியென்பது மட்டுமில்லாமல், ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கும் திரைப்படங்களைத் தயாரிப்பது அவரது தனித்திறமை. ராஜ்குமார் சந்தொஷி இயக்கத்தில், 2000இல் இவர் தயாரித்து வெளிவந்த புகார்’, திரைதுறையின் உயரிய விருதான, இரண்டு தேசிய விருதுகளை வென்றது. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2002இல் வெளிவந்த “கம்பனி”, பரிந்துரைக்கப்பட்ட பதினோரு பிரிவுகளில், ஆறு பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றது. இத்திரைப்படம், 2004ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்டின் திரைப்பட விழாவிலும், நியூயார்க்-ஆசிய திரைப்பட விழாவிலும், வெகுவான பாராட்டுகளையும் பெற்றது.

அவர் தயாரித்து 1997இல் வெளிவந்த “ஜுடாய்” ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம். இவர் தயாரிப்பில் 2005இல் வெளிவந்த “தி காமெடி”, “நோ என்ட்ரி” மாபெரும் வசூலை வாரி குவித்தது. 2009இல் சல்மான்கானை கதாநாயகனாக நடிக்க வைத்து அவர் தயாரித்த “wanted” அனைத்து முந்தைய சாதனைகளையும் முறியடித்து, இந்தியாவில் மட்டும் சுமார் ரூ. 100 கோடியும், அயல்நாடுகளில் சுமார் ரூ. 26 கோடியும் விற்பனையாகி வசூல் சாதனை படைத்தது. போனி கபூர் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள், இன்று ஹிந்தி திரையுலகின் முன்னணி திரை நட்சத்திரங்களாக உலா வருகின்றனர். அவர் “வோஹ் சாத் தின்” மூலம் அணில் கபூரையும், “கோயி மேரே தில் சே பூச்சே” மூலம் இஷா தியோலையும், “ப்ரேம்” மூலம் சஞ்சய் கபூரையும், தபுவையும் அறிமுகப் படுத்தியுள்ளார். அவருடைய ஆரம்ப காலங்களில் தயாரித்த “ஹம் பான்ச்”, மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அம்ரிஷ் பூரி, ஹிந்தி திரை உலகில் தங்களை நிலைப்படுத்தி கொள்ள பெருமளவில் உதவியது. முப்பது திரைப்படங்களுக்கு மேல் தயாரிப்பாளராக தன்னை நிலை நிறுத்திகொண்ட போனி கபூரின் சமீபத்திய படைப்பான “மாம்” வரும் ஜூலை 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படம் அவரது மனைவியும் பழம்பெரும் நடிகையுமான ஸ்ரீதேவியின் 300வது திரைப்படம் மட்டுமல்ல, ஸ்ரீதேவியின் 50 ஆண்டுகாலத் திரையுலக வாழ்க்கையின் முத்தாய்பாகவும் அமைகிறது.

 

தயாரிப்பாளர்: சுனில் மன்சந்தா

சுனில் மன்சந்தா “மேட் பிலிம்ஸ்” நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிறுவனம் சின்னத்திரைக்கு உயர்தரமான விளம்பரதாரர் நிகழ்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தது. சுனில் அவருடைய பால்ய நண்பரான முகுல் ஆனந்துடன் இணைந்து இந்நிறுவனத்தை 1991ஆம் ஆண்டு துவக்கினார். இருவரும் இணைந்து வாசகர்கள் இதுவரை கண்டிராதப் பல பிரபலமான, புதுமையான நல்ல நிகழ்சிகளை தயாரித்து பெயர் பெற்றனர். ஆயினும் 1997இல் நண்பர் முகுல் ஆனந்தின் திடீர் மறைவுக்கு பின், தனித்திருந்து எல்லாவற்றையும் கவனித்து கொண்டு இந்நிறுவனத்தை வானளாவிய வளர்ச்சிக்கு இட்டுச் சென்றார். கடந்த 20 ஆண்டு காலத்தில் 1500 விளம்பரதாரர் நிகழ்சிகளையும், 8 முழு நீள திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்ட இந்நிறுவனத்தின் “பா” 2009ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைத் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. ஆர்வமும் ஆளுமைத் திறனும் ஒருங்கே இணைந்த சுனில், 2012ஆம் ஆண்டு “மேட் ஸ்டுடியோசை” துவக்கினார்.

இந்நிறுவனம் இதுவரை கண்டிராத, ஈடுஇணையற்ற பல புதுமையான தொழில் நுட்பங்களையும், தேவையான அத்தனை உபகரணங்களையும், ஏற்பாடுகளையும், திரைப்படத் தயாரிப்பு என்ற ஒற்றை சாளரதுக்குள் கொண்டு வந்து சாதனை படைத்தது. இன்றும் மேட் ஸ்டுடியோஸ் திரைப்படத் துறைக்கு தேவையான வாடகை உபகரணங்கள் வழங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரித்த தேரே நாம், சீனி கம், பா போன்றவை மிக பெரிய வசூலை தந்தது. இந்த ஆண்டு சுனில், போனி கபூருடன் இணைந்து “மாம்” தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல்

ஜீ குழுமத்தின் அங்கமான இந்நிறுவனம், உலக அளவில் திரைப்பட விநியோகம், மற்றும் கையகபடுத்துதல் போன்ற துறைகளில் தன்னை ஈடுபடுத்திள்ளது. இந்தியாவின் முன்னணி சின்னத்திரை சேனல்கள், ஊடகம், மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களை உள்ளடக்கிய ஜீ லிமிடெட் 169 நாடுகளில், சுமார் 95 கோடி வாசகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது. ஜீ ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பாலிவுட் படங்களை மட்டுமில்லாமல், சர்வதேச மொழிகளில் வெளியிடப்படும் பல்வேறு படைப்புக்களையும் கையகப்படுத்தி விநியோகித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான வெளியீடுகளில் முக்கியமாக மோஹித் சூரி இயக்கும் ஹாப் கேர்ள்பிரண்ட் திரைப்படமும், ரவி உத்யவர் இயக்கும் “மாம்” திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.

இசை அமைப்பாளர்: ஏ ஆர் ரஹ்மான்

இந்த இசைமேதை, இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தனிஇசை தயாரிப்பாளர், இசைக்கலைஞர், கொடையாளர் போன்ற பன்முக பரிமாணங்கொண்ட மாமனிதர். இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்தை, மின்னணு சாதனங்களின் மூலமும், பாரம்பரிய இசைக்குழுவுடனும் சேர்ந்து உலக இசையுடன் இணைத்துப் பெருமை சேர்த்தவர். இரண்டு அகடெமி விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், ஒரு பாப்தா விருது, ஒரு கோல்டன் க்ளோப் விருது, நான்கு தேசிய விருதுகள், பதினைந்து பிலிம் பேர் விருதுகள், மற்றும் பதினைந்து தென்பிராந்திய பிலிம் பேர் விருதுகளைப் பெற்றவர். இந்திய அரசால் 2010ஆம் ஆண்டு உயரிய தேசிய விருதான “பத்ம பூஷன்” கொடுத்து கௌரவிக்க பட்டவர்.

டைம் பத்திரிகை 2009ஆம் ஆண்டு, உலகின் முதல் நூறு செல்வாக்குடைய மனிதர்களுள் ஒருவராய் இவரை இணைத்து கொண்டது. இவரை 2011ஆம் ஆண்டு “சாங் லைன்”என்ற ஆங்கிலேய இசை பத்திரிகை, “நாளைய உலகஇசையின் அடையாளச்சின்னம்” என கௌரவித்து மகிழ்ந்தது. இந்திய அளவிலும், உலக அரங்கிலும் திரைப்படதுறையில் மிகவும் பிரபலமான, ஒரு இசை வல்லுநர். இந்திய திரையுலக இசையை மாற்றி அமைத்ததோடு மட்டுமல்லாமல் பல திரை படங்களின் மேலான வெற்றிக்கும் வித்திட்டிருக்கிறார். ரஹ்மான் ஒரு தலை சிறந்த மனிதநேயமிக்கவர், பண்பாளர், கொடையாளர், பல்வேறு நல்ல காரியங்களுக்காக தன்னுடைய பங்களிப்பு மட்டுமின்றி பணம் திரட்டவும் உதவி வருகிறார்.

இயக்குனரின் குறிப்பு

விளம்பர பட இயக்குனரான, ரவி உத்யவர் “மாம்” என்ற இத்திரைப்படத்தின் மூலம், ஸ்ரீதேவி, நவாசுதீன் சித்திக், மற்றும் அக்ஷய் கண்ணா ஆகியோரை இயக்குகிறார். ஒரு உணர்வுப்பூர்வமான திகில் நிறைந்த இத்திரைபடம், ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தை ஆராய்கிறது. நான் முதல்முறையாக போனி கபூரை சந்திக்கும்போது, “இந்த கதை ஒரு சிறு விதையாய் எங்கள் மனதில் இருந்தது” என்கிறார் ரவி. வெகுநாளாய் நான் இதைப் பற்றி ஒரு படம் இயக்க ஆவலாய் இருந்தேன். ஏனென்றால் உறவுமுறைகளும், அதனூடே பிணைந்து இருக்கும் சிக்கல்களும், எனக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது.

எப்போதுமே மனித உறவுகளுக்குள் இருக்கும் சங்கேத மொழிகளும், உதிர்க்கப்படாத வார்த்தைகளும், அவை பேசப்படாமலேயே ஏற்படுத்தும் புரிதல்களும், தாக்கங்களும் மனித வாழ்வின் சிக்கல்களைப் பறைசாற்றும் மௌன கவிதைகளாகவே என்னை ஈர்த்தது. ஒரு தாய்க்கும் அவளது குழந்தைக்குமான உறவு என்பது வாழ்நாள் வரை நீடிக்கும் ஒரு பந்தம். அதற்கு ஒரு சோதனை ஏற்படும் போதோ, அல்லது களங்கம் ஏற்படும் போதோ, ஒரு தாயானவள் எப்பாடுபட்டேனும் அதனை பாதுகாக்கத் துணிகிறாள். இதனை நான் ஆழ்ந்து ஆராய விரும்பினேன். ஒரு தாயின் குணாதிசியங்கள் இப்படித்தான் இருக்கும் என்பது உண்மையானால், இரத்த சம்பந்தம் இல்லாத தாய் என்றாலும் இப்படிதானோ? உதிரத்தை பகிராமல், இதயத்தைப் பகிர்ந்தாலும் இத்தனைப் பாதுகாப்புணர்ச்சியும் பரிவும் ஒரு தாயுள்ளத்துக்கு உண்டோ? வடஇந்தியா மாறிக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட, பெரும்பாலும் ஆண்களின் மேலாதிக்கம் வலுவாகவே இருக்கிறது.

ஒரு பெண் அமைதியாக வாழ்வதற்கே இங்கு இருமடங்குப் பலமாக போராடவேண்டியுள்ளதால் என்னுடைய கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் வட இந்திய நகரங்களான தில்லியுலும் நொய்டாவிலும் அமைத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரங்களின் வழியேதான் நான் இந்த கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். இதன் மூலம், நீங்களும் கதாபாத்திரங்களாகவே மாறி, அவர்களோடு சேர்ந்து உணர்வுகளை புரிந்து கொள்ளவும், அழுகையும், சிரிப்பும், கோபமுமாக பயணிப்பீர்கள் என்று நம்புகிறேன்.