ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் என்ற ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பையடுத்தே தங்கள் முடிவை தெரிவிப்பதாக மத்திய அரசு கூறிவிட்டது. ஆனால், தீர்ப்பு உடனடியாக வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதால் சட்டப்பூர்வமாக ஜல்லிக்கட்டை நடத்தும் வாய்ப்பு நழுவியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தடாலடி முடிவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் நடக்கின்றன. அதேசமயம், பொங்கலன்று மாடுபிடி வீரர்கள் பல்வேறு இடங்களில் ஏறுதழுவுதல் விளையாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர்.  இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களை போலீசார் கலைத்தபோது, இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோன்று பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அங்கு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு அளிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தி விரட்டியடித்ததால் வன்முறை வெடித்தது.  இது ஒருபுறமிருக்க, அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடந்தால் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பீட்டா கூறுகிறது. இதுபற்றி உள்துறைக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.