இதயம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய சென்னையில் முதல் செயற்கை நுண்ணறிவு ‘கேத் ஆய்வகம்’: குமரன் மருத்துவமனை – ரேலா இன்ஸ்டிடியூட் இணைந்து துவக்கம்

தமிழகத்தில் முதல் முறையாக ரத்த நாளம், நரம்பு செயல்பாடுகள், புற்றுநோய் சிகிச்சைக்கு ஆட்டோ ரைட்டின் ‘இன்னோவா ஐஜிஎஸ் 5’ கருவி அறிமுகம்

சென்னை, மார்ச் 4 : தமிழகத்தில் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேத் ஆய்வகத்தை குமரன் மருத்துவமனை மற்றும் ரேலா இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து இன்று சென்னையில் அறிமுகப்படுத்தின. இந்த ஆய்வகத்தை ரேலா மருத்துவமனை தலைவர் பேராசிரியர் முகமது ரேலா முன்னிலையில் ரவி அப்பாசாமி மற்றும் டாக்டர் ஐசரி கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேம்பட்ட காட்சிப்படுத்தல் மற்றும் பல்நோக்கு பயன்பாடுகளுடன் ஆட்டோ ரைட்டின் இன்னோவா ஐஜிஎஸ் 5 கருவியானது, ரத்த நாளங்கள், மென்மையான திசுக்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்டறிய உதவும்.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த கேத் ஆய்வகம், இதயம், ரத்த நாளம், புற்றுநோய் மற்றும் நரம்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க இது மருத்துவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இந்த கருவியைக் கொண்டு முன்கூட்டியே பிரச்சினைகளை கண்டறிவதன் மூலம் பாதிப்பு ஏற்படவிருக்கும் நபர்களுக்கு அது வராமல் தடுக்கவும், அவர்களின் உடல் நலத்தை மேம்படுத்தி மருத்துவத்தின் மீதான நம்பிக்கையையும் இது அதிகரிக்கும். இந்த இன்னோவா ஐஜிஎஸ் 5 கருவியானது முற்றிலும் தானியங்கியாக செயல்படும். இதை கைகளால் சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாக இதன்மூலம் எடுக்கப்படும் படங்கள் மிகத் துல்லியமாக இருப்பதோடு பரிசோதனைகளையும் வேகமாக செய்ய முடியும்.

இது குறித்து ரேலா மருத்துவமனை தலைவர் பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், இது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இது மருத்துவர்கள் தங்கள் வேலைகளில் மிகத் துல்லியமாக செயல்பட உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தை சென்னை குமரன் மருத்துவமனையில் வழங்குவதில் நான் தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு கேத் ஆய்வகம் உண்மையில் மருத்துவர்களுக்கு கூடுதல் கண்களைப் போன்று செயல்படும். இது உள் ரத்தக்குழாய் செயல்பாடுகளை துல்லியமாக காட்டும் திறன் கொண்டதாகும். மேலும் ஒருவருக்கு ரத்தக் குழாய் சம்பந்தமான பிரச்சினை ஏதேனும் இருப்பின் அது குறித்து உடனடி கருத்துக்களையும் அது தொடர்பான மருத்துவ ஆதாரங்களையும் இந்த கருவி உடனடியாக வழங்குகிறது. குமரன் மருத்துவமனை, ரேலா இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து உலகத்தரம் வாய்ந்த சுகாதார தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் தொடர்ந்து உறுதியுடன் இருந்து வருகின்றன. இதன் காரணமாக நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

இது குறித்து குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவா கூறுகையில், ஜிஇ நிறுவனத்தின் ஆட்டோ ரைட் இன்னோவா ஐஜிஎஸ் 5 கருவியானது செயற்கை நுண்ணறிவு கொண்ட தமிழகத்தின் முதல் கருவியாகும். மேலும் இது சிடி ஸ்கேன் உள்ளிட்ட சாப்ட்வேர்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத சிகிச்சைகளை வழங்க முடியும். மேலும் இந்த கருவி நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். ஏனெனில் இது குடலிறக்கத்தைத் தவிர்க்க நோயாளிகளின் சிறிய ரத்த நாள செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிய மருத்துவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. இன்று துவக்கப்பட்டுள்ள இந்த கேத் ஆய்வகம் கூடுதல் கட்டணமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் என்று அவர் கூறினார்.