ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்படுவதன் மூலம் விலைவாசி கட்டுக்குள் இருக்கும்

ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வருகிறது. இந்த வரி விதிப்பு முறை பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறது. இது மக்களுக்கு சுமைதான் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் சில வியாபாரிகளின் வாதமாக முன்வைக்கப்படுகிறது. பொதுவாக வரி விதிப்பு முறையை படித்தவர்கள் கூட முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. எனவே சாதாரண மக்கள் புரிந்து கொள்வது சிரமம்தான். எனவேதான் மக்கள் மத்தியில் இதைப்பற்றி ஒருவித பீதியும், அச்ச உணர்வும் நிலவுகிறது.

இதை தெளிவுபடுத்துவதற்காக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பற்றி திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடியிடம் அளித்த விளக்கம்;

ஜி.எஸ்.டி. என்பது நமது நாட்டுக்கு புதிது எதையும் புதிதாக கொண்டு வரும்போது இந்த மாதிரி உணர்வுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஆனால் உலகம் முழுவதும் 160 நாடுகளில் எல்லாம் இந்த வரி விதிப்பு முறை அமலில் இருக்கிறது. இதன் மூலம் அந்த நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளன. அந்த நாடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அதன் மூலம் கிடைத்த அனுபவத்தால்தான் நம் நாட்டிலும் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது.

இது ஒரு மாதம், ஒரு வருடத்தில் திட்டமிடப்பட்டு செயல்பாட்டுக்கு வரவில்லை. 10 வருடங்களுக்கும் மேலாக நிபுணர்கள், அதிகாரிகள், அரசுகள் பல தளங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதன் பிறகுதான் ஒரு வடிவத்துக்கு வந்திருக்கிறது. 2005ஆம் ஆண்டிலேயே ஜி.எஸ்.டி. பற்றி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. இது பற்றிய வெள்ளை அறிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் வெளியிட்டது. முழுக்க முழுக்க மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் இணைந்துதான் தயாரித்தது. இதன் பலனை இனிதான் நாட்டு மக்கள் அனுபவிக்கப் போகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரி ஏன் வந்தது? அதனால் விளையப் போகும் நன்மைகள் என்ன? பொதுவாக ஒரு பொருளின் விலை என்பது அந்த பொருளின் தயாரிப்பு செலவும் வரியும் சேர்ந்ததுதான். பொருள்களுக்கான வரிகளை மட்டும்தான் சட்டமன்றங்களும் பாராளுமன்றமும் முடிவு செய்கின்றன. இதை தவிர மேலும் சில வரிகள் அந்த பொருளின் உற்பத்தி செலவுக்கு உள்ளே மறைமுகமாக அடங்கி இருக்கின்றன.