கடந்த தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்: எடப்பாடி பழனிச்சாமி

நெல்லையில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல நூற்றாண்டு காலத்திற்கு பேசும் சாதனைகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். அவரது வழியில் அரசு பல திட்டங்களை படிப்படியாக தொடங்கி வைத்து வருகிறது. 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த பல திட்டங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சிலர் வார்த்தையால் மட்டும் கூறுவார்கள். ஆனால் செயல் வடிவம் இருக்காது. ஜெயலலிதா எந்த திட்டம் அறிவித்தாலும் ஆலோசனை நடத்தி சரியாக செயல்படுத்துவார்.  அதனால் தான் அவரது திட்டங்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. மக்கள் நலன் மட்டுமே அவரது குறிக்கோள். இதனால் தான் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை காட்டிலும் நம்பிக்கை உள்ள மாநிலமாக முன்னேறி இருக்கிறது.

இந்த பூமி உள்ளவரை ஜெயலலிதா புகழ் நிலைத்து நிற்கும். தற்போது தமிழ்நாட்டில் பல மண்டலங்களாக பிரித்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். நான் பதவி ஏற்றதும் 5 திட்டங்களில் கையெழுத்திட்டு அதை நிறைவேற்றி உள்ளேன். உழைக்கும் மகளிருக்கு ரூ.200 கோடி செலவில் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்குவது. 6 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மகப்பேறு நிதி உதவி திட்டத்தை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தியது. ரூ.85 கோடியில் மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை இருமடங்காக உயர்த்தும் திட்டம், ஜெயலலிதா வழியில் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் பருவ மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு நிவாரண உதவியாக 2,747 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதே போல் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி தட்டுப்பாடில்லாமல் வழங்கவும் பல்வேறு திட்டங்கள் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக்குழு பரிந்துரையை மாநிலத்திலும் அமல்படுத்த அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பதவியேற்ற குறுகிய காலங்களிலேயே பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் ரூ.1,486 கோடியில் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அது போல திருச்சியிலும் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இன்று நெல்லை மண்டலத்தில் 235.61 கோடி மதிப்பீல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் மிகவும் பழம்பெருமை வாய்ந்தது. இங்கு ஐவகை நிலங்கள் உள்ளன. சுதந்திர போராட்ட தியாகிகள் வளர்ந்த ஊர். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் கல்வி நிறுவனங்கள் பல இங்கு உள்ளன. தூத்துக்குடி பாரதி பிறந்த புகழ் மிக்க இடம். குமரி மாவட்டம் அதிகம் படித்தவர்கள் நிறைந்த பகுதி. எனவே இங்கு பணிகளை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று கூறினார். அவரது வழியில் இப்போது மேலும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் நலன் காக்கும் அரசாக இந்த அரசு விளங்கி வருகிறது. இதுவரை இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 2541 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தங்கச்சிமடம் மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மீனவர்களை காக்கும் அரணாக இந்த அரசு செயல்படும். தமிழகத்தில் 142 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய வறட்சி ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்த வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

கிராம புறத்தில் வேலை வாய்ப்பை பெருக்கும் விதமாக 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிருக்கு தனி காவல் நிலையம், தொட்டில் குழந்தை திட்டம், திருமண உதவி திட்டம், மகப்பேறு நிதி உதவி என்று எண்ணற்ற திட்டங்கள் இந்த ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் வழியில் இந்த அரசு அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து பாடுபடும். ஏராளமான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றும். ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்படும். நெல்லையில் வெள்ள நீர் கால்வாய் திட்டங்கள் உள்பட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.