1ஜிபி டேட்டா வெறும் 150 ரூபாய் மட்டுமே: ஏர்டெல் புதிய பூஸ்டர் பேக்

ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஜியோவை எதிர்கொள்ள அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் விலை ரூ.345 என நிர்ணயம் செய்யப்பட்டது. எனினும் இந்த விலை சில வட்டாரங்களில் மாறலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய பூஸ்டர் பேக்களை அறிமுகம் செய்ய ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதன் படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா ரூ.150க்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு அறிவிக்கப்பட்ட பிரீபெயிட் திட்டத்தை போன்றே போஸ்ட்பெயிட் திட்டத்திலும் பகலில் 500 எம்பி டேட்டாவும், நள்ளிரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை 500 எம்பி டேட்டா வழங்கப்படும் என இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.  முன்னதாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் சர்பிரைஸ் காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள ஏர்டெல் போன்றே வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களை சமீபத்தில் அறிமுகம் செய்தன. செப்டம்பர் 2016 இல் ஜியோ சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக போட்டி நிறுவனங்கள் புதிய கட்டணங்கள் மற்றும் அதிக டேட்டா சலுகைகளை அறிவித்து வருகின்றன.