இ-சேவை மையங்களில் பொதுமக்கள் மாற்று மின்னணு குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலகம், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை பெருநகர மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை பெருநகர மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்படும் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் மாற்று மின்னணு குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் தற்பொழுது பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைக்கு பதிலாக புதிதாக மின்னணு குடும்ப அட்டையை தமிழ்நாடு அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கி வருகிறது. ஏற்கனவே பெறப்பட்ட மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போயிருந்தாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தாலோ மேலே தெரிவிக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் ரூ.30/- கட்டணம் செலுத்தி புதிதாக மாற்று மின்னணு குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பழைய குடும்ப அட்டையில் பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணை தெரிவிக்க வேண்டும்.

அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல் (OTP Number ) அனுப்பப்படும். அந்த கடவுச் சொல்லை பயன்படுத்தி புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும். பழைய குடும்ப அட்டையில் பதிவு செய்த கைப்பேசி எண் தெரியாதவர்களுக்கு இ-சேவை மையங்களில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க இயலாது. புதிய மின்னணு குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை திருத்தங்கள் செய்யும் பணி மேற்கூரிய இ-சேவை மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், குடும்ப அட்டையின் வகை (Ration Card Type) மாற்றம் செய்தல், சிலிண்டர்களின் விவரத்தினை மாற்றம் செய்தல், குடும்ப தலைவர் பெயரை மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைக்காக இ- சேவை மையங்களில் ரூ.60/- செலுத்தி விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது அவ்விண்ணப்பங்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் அளித்த பிறகு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற பிறகு அருகிலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இ-சேவை மையத்தை அணுகி திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை ரூ.30/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேற்கூறிய இவ்விரண்டு சேவைகளும் 20.6.2017 முதல் நடைமுறைக்கு வரும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டுமெனில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.