நியாயவிலைக்கடை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆலோசனைக்கூட்டம்

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள சி.பி.எம். கட்சி அலுவலகத்தில் நியாயவிலைக்கடை ஊழியர்கள், அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில துணை தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். தொ.மு.ச தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க துணைத்தலைவர் காளிமுத்து வரவேற்புரையாற்றினார்.

தொ.மு.ச மாநில இணைப்பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், ஊழியர்கள் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், சலுகைகள் வழங்கப்படவேண்டும், எடைகுறைவு இல்லமால் பொருள்களை பொட்டல முறையில் வழங்க வேண்டும், ஆய்வு என்ற பெயரில் அபராதம் விதிப்பது, ஊழியர்களிடம் அத்துமீறி நடப்பது போன்றவற்றை கைவிட வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ந்தேதி நியாயவிலைக்கடை ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் சென்னையில் தலைமை செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அந்த போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளில் பணபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் தொ.மு.ச. மாவட்ட செயலாளர் வேல்முருகேசன், மாவட்டபொருளாளர் சண்முகவேல், வட்டார தலைவ் சீனிவாசன் மற்றும் நியாயவிலைக்கடை ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர். இறுதியில் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க செயலாளர் ரமேஷ்இம்மானுவேல் நன்றி கூறினார்.