அதிமுக பிளவின் போது ஓபிஎஸ் பக்கம் இருந்த எம்.பி செங்குட்டுவன் இன்று அந்த அணியில் இருந்து பிரிந்து டிடிவி தினகரனுக்கு தனது ஆதரவை அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசில் ஊழல் மலிந்து விட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநில அரசாக தமிழக அரசு உள்ளது. ஊழல்வாதிகள் என குறிப்பிட்டவர்கள் உடன் இன்று ஓபிஎஸ் கைகோர்த்து உள்ளார். பதவிகள் கிடைத்த உடன் தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் மாற்றிக் கொண்டார். ஊழல் நிறைந்த அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் டிடிவி தினகரனுக்கு எனது ஆதரவை தெரிவிக்க வந்தேன். தற்போதைய ஊழல் அரசு தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.
இத்தனை நாள் ஜெயலலிதா உருவாகிய அரசை விட்டு கொடுக்க கூடாது என அமைதியாக இருந்தோம். ஆனால் இதற்கு மேல் அமைதியாக இருந்தால் தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகி விடும். எப்போதும் நான் ஊழலுக்கு எதிரானவன். தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் தான் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது. அங்கிருக்கும் அமைச்சர் ஒருவர் தான் இது அனைத்திற்கும் காரணம். தினம் தோறும் கோடிக்கணக்கில் மணல் கொள்ளை அங்கு நடைபெறுகிறது. மாணவி அனிதாவின் தற்கொலையே இந்த நிலைப்பாட்டையே எடுத்தோம் என்றார். இந்த சந்திப்பின் போது திண்டுக்கல் எம்.பி உதயகுமாரும் உடன் இருந்தார். டிடிவி தினகரனுக்கு தங்கள் ஆதரவை இவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, டிடிவி அணியின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.