முதலமைச்சரின் பயணம் வெற்றி, தமிழகத்தின் தாகம் தீர்க்க ஆந்திரா முடிவு

 தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., தண்ணீர் தர ஆந்திரா சம்மதம் தெரிவிக்கப்பட்டது. தெலுங்கு கங்கை திட்டத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது வரை யாரும் எடுக்காத முயற்சியாக முதல் முறையாக ஆந்திராவுக்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்., நடத்திய பேச்சுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 12) காலை மூத்த அமைச்சர்களுடன் சென்றார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துப் பேசினார். தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப்போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.400 கோடி தமிழகம் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் எம்.ஜி.ஆர்., – என்.டி.ராமராவ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது. இன்று நடத்திய பேச்சில், தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., தண்ணீர் தர ஆந்திரா சம்மதம் தெரிவித்தது. இது தொடர்பாக அடுத்த வாரம் திருப்பதியில் உயர் அதிகாரிகள் கொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. திட்டம் தொடர்பாக பராமரிப்பு செலவு ரூ. 433 கோடியை வழங்குவது தொடர்பாக பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று வந்திருக்கும் முடிவால் சென்னை குடி நீர் பிரச்சனையை தீர்க்க முடியும். தமிழகத்தின் தரப்பில் 4 டி.எம்.சி., தண்ணீர் கேட்டாலும், ஆந்திரா அரசு 2.5 டி.எம்.சி தண்ணீராவது தர ஆந்திரா சம்மதித்திருப்பது நல்ல தகவலாக சென்னை மக்களுக்கு கிடைத்திருக்கிறது.