‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் – சத்யஜோதி பிலிம்ஸுக்கு மேலும் ஒரு பெருமை

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் இரண்டு முக்கியமான தேசிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ் Special Mention விருதையும் பெற்றுள்ளார்.

இந்த விருதுகள், சத்யஜோதி பிலிம்ஸின் நீண்டகால தரமான திரைப்படப் பயணத்திற்கு கிடைத்த மற்றொரு முக்கிய அங்கீகாரமாகும். 1959-ஆம் ஆண்டு கல்யாண பரிசு திரைப்படம் மூலம் தொடங்கிய தேசிய விருது பயணம், ரிக்ஷாக்காரன், மூன்றாம் பிறை, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் மூலம் மேலும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனைக்கு காரணமான இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. மேலும், தேசிய அளவில் Special Mention விருது பெற்ற நடிகர் தனுஷுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

தரமான, அர்த்தமுள்ள மற்றும் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை வழங்கும் தனது பயணத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இந்த தேசிய அங்கீகாரம் எதிர்கால படைப்புகளுக்கு மேலும் உற்சாகம் அளிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.