அக்.11ல் அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற அக்டோபர் 18ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்க இன்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20% போனஸ் எனவும், நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10% போனஸ் தொகையும் அளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகம், நுகர்பொருள் பகிர்மான கழகம், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவைகளுக்கு 8.33% உபரித்தொகை மற்றும் 11.77% கருணைத்தொகை என மொத்தம் 20% போனஸ் வழங்கப்படுகிறது.  நஷ்டமடைந்த நிறுவனங்களான வீட்டுவசதி வாரியம், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகளுக்கு 8.33% உபரித்தொகை மற்றும் 1.66% கருணைத்தொகை என 10% போனஸ் வழங்கப்படுகிறது. ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400ம், அதிகபட்சமாக ரூ.16,800ம் போனஸாக பெறுவர். தமிழகத்தில் மொத்தமுள்ள 3,69,000 ஊழியர்களுக்கு சுமார் 489 கோடி அளவிலான நிதி போனஸுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் வரும் அக்டோபர் 11ம் தேதி தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெறும் எனவும், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.