பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவை மையமாக வைத்து, சினிமா படம் உருவாகிறது. இதில் நயன்தாரா அல்லது அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறினார். கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையை ஆய்வு செய்த போது, பல முறைகேடுகளும் விதிமீறல்களும் நடப்பதை அறிந்தார். இதையொட்டி, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக அவர் கூறிய குற்றச்சாட்டு தமிழக, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரூபா, அதிரடியாக மாற்றப்பட்டார். அத்துடன், முக்கிய சிறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் படம் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, குப்பி, காவலர் குடியிருப்பு, வனயுத்தம் , ஒரு மெல்லிய கோடு படங்களை இயக்கியவர். இப்போது, டி.ஐ.ஜி. ரூபா கதையை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.
இதுபற்றி இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறுகையில், ‘சிறைத் துறையில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்தே படம் இயக்க இருக்கிறேன். இது தொடர்பாக ரூபாவிடம் பேசினேன். படம் எடுக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக மேலும் சில தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். ரூபா கேரக்டரில் நயன்தாரா அல்லது அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக நயன்தாரா மற்றும் அனுஷ்காவிடம் பேச இருக்கிறேன்’ என்றார்.