மீண்டும் மின் உற்பத்தி கூடங்குளம் அணு உலையில்

சுமார் 4 மாத காலத்திற்கு பிறகு கூடங்குளம் அணு உலையில் இன்று மின் உற்பத்தி துவங்கி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் இந்திய அரசு அணு மின் நிலையம் அமைத்துள்ளது. முதல் இரண்டு அலகுகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்கி விட்ட நிலையில் 3வது மற்றும் 4வது அலகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 5வது மற்றும் 6வது அலகுகள் அமைப்பதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. முதல் இரண்டு அணு உலைகள் மூலம் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இயலும்.

இந்த அணு உலைக்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த 2013ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த அணு உலையில் மின் உற்பத்தி துவங்கியது.  இடையிடையே பராமரிப்பு பணிகளுக்காக அணு உலை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு முதல் அணு உலையில் முதல் அலகில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் எரிபொருள் நிரப்பும் பணிக்காக முதல் அலகில் மின் உற்பத்தியானது நிறுத்தப்பட்டது.  4 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த எரிபொருள் நிரப்பும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.

ஒரு முறை எரிபொருள் நிரப்பப்பட்டால் சுமார் 7000 மணி நேரத்திற்கு (தோராயமாக 291 நாட்கள்) மின் உற்பத்தியானது நடைபெறும். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி அணு உலையில் அணு பிளவு துவங்கியதாகவும், அதன் தொடர்ச்சியாக இன்று மின் உற்பத்தி ஆரம்பித்து இருப்பதாகவும் அணு உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.